-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ இதழ் 6 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசா, சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீட பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதன், ஊடகத்துறை பேராசிரியர் சி.ரகுராம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து சஞ்சிகைக்கான கருத்துரையை கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தவுள்ளார். தொடர்ந்து மாணவர்களால் இயக்கப்பட்ட குறும்படங்களின் திரையிடல் இடம்பெறும்.
பெண் பிள்ளைகள் ஆபத்தை எதிர்கொள்பவர்களாக மாத்திரம் இல்லாமல் தமக்கான சவால்களை எதிர்க்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் ‘ மறம்’, மக்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்த பெண் போராளியின் உண்மைக் கதையான ‘தீரா’, கல்வி அவளுக்குப் பட்டமும் பதவியும் அல்ல் அது வறுமைக் கட்டிலிருந்து வெளியேறும் ஒரே ஒரு படிக்கட்டு; மரணத் தறுவாயிலும் தனது பட்டதாரி மகனைக் கரைசேர்க்கத் துடிக்கும் மலையகத்தாயின் உண்மைக் கதை ‘தாய்’,

யுத்தத்தின் போது காணியை இழந்த, தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையிலான பாசம்; தாத்தாவின் உழைப்பினால் வாங்கிய காணியை இழந்ததால் பேரன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பேசும் ‘தாய்நிலம்’, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஏக்கத்தை முன்வைக்கும் ‘நாள் 3036’,
தாயை இழந்த மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தைப் பதிவுசெய்யும் ‘சுவடு’, மலையகத்தில் நில உரிமைக்கான குரல்களை எடுத்துக்காட்டும் ‘நிலவேட்கை’, இன்றைய காலகட்டத்தில் மனிதாபிமானம் அற்ற வகையில் செயற்படும் சமூக ஊடகங்களைப் பிரதிபலிக்கும் ‘கலியுகம்’, சமூக ஊடகங்களில் பரவும் இணையக் குற்றவாளிகளைக் கண்டறியும் துப்பறிவாளரின் முயற்சிகளைச் சொல்லும் ‘டிடெக்டிவ்’,
வாழ்வில் தான் செய்த தவறுகளை உணரும் ஒரு மனிதனின் கதையான ‘உணர்வழி’, தனது பிள்ளையைப் போருக்காக அனுப்பி அப்பிள்ளை வீரமரணம் எய்தியும் பிள்ளை உயிரோடு இருப்பதாக எண்ணி வாழும் தாயின் நிலையைப் பேசும் ‘பின்னல்’,
தன்னுயிரைக் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றும் தியாகத்தினை வெளிக்காட்டும் ‘ஈகம்’, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற கூற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் ‘மூன்றாம் விதி’, ஒரு பெண் தன் இலக்கை நோக்கிப் பயணிக்கையில் தன்னம்பிக்கைக் குறைவாலும், சுற்றியிருப்பவர்களின் எதிர்மறை விமர்சனங்களாலும் முடங்கிப்போகும்போது அவள் தீர்மானிக்கும் ஒரு நொடியின் மாற்றத்தை பேசும் ‘ஆனால்’, சரியான தலைமை இல்லா ஓர் சமூகம் வழிபிறழ்வான பாதைகளில் பயணித்துக் கொண்டிருப்பதைப் பறைசாற்றும் ‘சாயல்’ ஆகிய குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.


















