– மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பெனிக்னஸ் –
-த.சுபேசன்-
போதைப்பொருட்கள் எமது சமூகத்திற்குள் புற்றீசல் போன்று தாராளமாக புகுந்திருப்பதாக மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பெனிக்னஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு நூலான ‘விடியல்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மாற்றம் அறக்கட்டளை 2017 ஆம் ஆண்டு, கிளிநொச்சி மாவட்டத்திலே ஆங்காங்கே புற்றீசல்கள் போல் பெருகி வந்த போதைப்பொருள் வியாபாரத்தையும் அதற்கு அடிமைகளாகிக் கொண்டிருந்த இளைஞர்களையும் காப்பாற்றுகின்ற ஒரு முயற்சியாக அருட்தந்தை வின்சன் பற்ரிக் அடிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றைய நாட்களிலே நாங்கள் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்கின்றோம். சிகிச்சை அளிக்கின்ற வசதிகள் தற்பொழுது எங்களிடம் இல்லாமல் இருக்கிறது. குடிபோதை நோயாளிகளாக இருக்கிறவர்களுக்கு நாம் விழிப்புணர்வு உதவிகளைச் செய்து வருகிறோம். ஆனால், இந்த உதவிகள் போதாது என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் இந்த போதை புற்றீசல் போல் எங்களுடைய சமூகத்துக்குள்ளே மலிந்திருக்கின்றது என்பதை நானும், நீங்களும் நன்றாக அறிவோம்.
போதைப்பொருள் இல்லாத இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். அப்போது தான் மாற்றத்தினுடைய தூரதரிசனத்தை நாம் காண முடியும். அதுவே எங்களுடைய தொலைநோக்காக இருக்கின்றது.
போதையினுடைய மூல காரணங்களை நாங்கள் இன்னும் அழிக்கவில்லை. அது எங்களுடைய சமூகத்தினுடைய விழுமியங்களிலே தான் தங்கியிருக்கிறது. ஒரு சமூகமாக இளைஞர்களை எங்கே கொண்டுபோகப் போகின்றோம் என்பதில் தான் எங்களுடைய வெற்றி தங்கியிருக்கிறது. அதிலேதான் மாற்றத்திற்கான மாற்றம் அறக்கட்டளையின் வெற்றியும் தங்கியிருப்பதை பார்க்கிறோம்.
அரசாங்கத்தினால் மாற்றம் அறக்கட்டளைக்கு மருதங்கேணி பிரதேசத்தில் ஒரு காணி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் காணியை ஒரு வளமுள்ள இடமாக விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கும், சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்ற ஒரு இடமாக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய தூரநோக்கம்.
இதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். பலர் எங்களுக்கு ஆங்காங்கே இருந்து சில உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் போதையை முறியடித்து வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என மேலும் தெரிவித்திருந்தார்.


















