-சு.பாஸ்கரன்-
தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக எப்போதும் உங்கள் பக்கமே நான் இருக்கிறேன் என்று சிங்களக் கவிஞர் திலீனா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற கவிஞர் தீபச்செல்வனின் நினைவில், நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உடலால் இன்று உங்களோடு இருக்கிறேன். ஆனால் நீண்ட காலமாகவே உங்களோடும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறும் கனவோடும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் வதை, சித்திரவதை இல்லாமல் சுதந்திரமாக மனிதத்தன்மையை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே கனவை சுமந்து நிற்கும் தீபச்செல்வனின் மனிதநேய வெளிப்பாடே இன்று என்னை இங்கு அழைத்து வந்துள்ளது.
அந்தக் கனவின் வெளிப்பாடு தென்னக சகோதரத்துவம் மட்டுமல்ல, உலகமெங்கும் மனிதத்தன்மை, சுதந்திரம், நீதி, சமத்துவம் குறித்து மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கும் ஆழமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

மனிதத்தன்மை, சுதந்திரம், வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வாழும் உரிமைக்காக உயிரையே பணயம் வைத்து கருத்து வெளிப்படுத்திய தீபச்செல்வனின் கவிதைகள் எவ்வளவு ஆழமாக எங்களை பாதிக்கின்றன என்பதைச் சொல்ல, அவரை இந்த மண்ணில் பிறந்த மிகச் சிறந்த மனிதநேயக் கவிஞர்களில் ஒருவராக நான் அழைக்க விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தலைமை வகித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.


















