தூக்கிட்டு உயிர்மாய்க்க முயற்சி!
யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒன்லைனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகி பெருமளவு பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை மீட்பதற்காக மேலும் பணத்தை கடன் வாங்கி சூதாட்டத்தில் மூழ்கிப்போய் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு உயிர் மாய்க்க முயற்சித்துள்ளார்.
இதன்போது தூக்கிட்ட கிளை பாரம் தாங்காது முறிந்து வீழந்ததால் சத்தம் கேட்டு உறவினர்கள் அவரை விரைந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குரல்வளை பகுதி கயிற்றால் நெரிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த இளைஞன் இலங்கை மின்சாரசபையில் கடமையாற்றிவருபவர் எனத் தெரியவருகின்றது.
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஒன்லைன் சூதாட்டம், பிரமிட் திட்டங்கள், ஒன்லைன் வியாபாரம் எனப் பலர் தமது பெரும் தொகை பணத்தை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















