-செ.ரவிசாந்-
ஜப்பசி மாத கார்த்திகை விரதத்தை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைபெற வேண்டி இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கிய வேல் தாங்கிய புனித திருத்தலத் தரிசன யாத்திரை நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் தலைமையில் ஆரம்பமாகியது.
சிவத்திரு. ஞான தவசுத சிவாச்சாரியார் கலந்து கொண்டு ஆசி வழங்கித் தரிசன யாத்திரையை ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் சைவப்புலவர் கந்த சத்தியதாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். தரிசன யாத்திரையில் ஆரம்பத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 65 அடியவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் மேலும் சில அடியவர்கள் மட்டக்களப்பில் இணைந்து கொள்வரெனவும் இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தரிசன யாத்திரை வழிகள் தோறும் பல ஆலயங்களைத் தரிசித்தவாறும், தெய்வீகப் பஜனைப் பாடல்கள் பாடியவாறும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கதிர்காமக் கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















