-செ.ரவிசாந்-
யுத்தம் உச்சமாக நடந்த போதும் கூட வடமாகாணம் கல்வியில் மூன்றாமிடத்திலேயே காணப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் தான் வடமாகாணம் கல்வியில் ஒன்பதாம் நிலைக்குத் தள்ளப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்தப் போராட்டத்தின் ஒருகட்டமாக பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபிக்கு அருகிலிருந்து பேரணியாக ஆரம்பித்து பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பங்கேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வியின் மையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுமார் 355 ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் தொடர்ந்தும் வெற்றிடங்களாகவிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு விடயமல்ல. வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் முன்வைக்காமலிருப்பது பல்கலைக்கழக நிர்வாகம் அரசாங்கத்துக்கு எந்தவொரு சுமைகளையும் ஏற்படுத்தாது தங்கள் பதவிகளுக்காக அமைதியாகச் செயற்படுகின்றதோ? என்ற சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
ஏனைய பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கான பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் வெற்றிடங்களை நிரப்பாமலிருப்பது நிர்வாகத்தின் உறுதித் தன்மை இல்லாததையே எடுத்துக் காட்டுகின்றது. பல்கலைக்கழக நிர்வாகம் கொழும்பு அரசாங்கத்துக்கும், அதிகாரிகளுக்கும் அவர்கள் விரும்பியவாறு சுமையை ஏற்படுத்தாமல் சமாளிச்சுப் போவோம் என்ற கலாசாரத்தைக் கைவிட வேண்டும்.
கல்வியில் வடமாகாணத்தை மீண்டும் முதலிடத்தில் கொண்டு வந்து நிலைநிறுத்துவதாயின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தே ஆக வேண்டும். பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது அதன் முதற்படி.பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்துக்கு எங்களின் முழுமையான ஆதரவு என்றுமிருக்கும். பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கொழும்பில் அமைச்சு மட்டத்தில் பேசி ஒரு தீர்வை எட்டுவதற்கு எங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவிருக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


















