-இ.கலைஅமுதன்- , -செ.ரவிசாந்-
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாட்டினை முற்றாக நிறுத்த கடும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்:
நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை சாத்தியமாக்கின்ற பணியில் நாம் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னெடுத்து வருகின்றோம்;.
இதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுஇடங்களில் கழிவுகள் அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொதுஇடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு தினமும் கண்காணிக்கப்படுகின்றது.
கண்காணிப்பு கமராக்கள் மூலம் கழிவுகள் வீசுபவர்கள் அடையாளம் கண்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொதுஇடங்களில் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
எனவே காலத்தின் தேவை கருதி இச் செயற்பாட்டினை முற்றாக நிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேலும் விரிபுபடுத்தவுள்ளது. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.


















