-சீனாவைப்போல் கடன் தரவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்-
-இ.கலைஅமுதன்-
அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தோல்வியில் முடிந்த துறைமுகமாக யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இருக்காது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான நிதியை இந்தியா அன்பளிப்பாக வழங்கும் நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நடந்தது நடக்கும் என்பது எப்படி? எனவும் கேள்வி எழுப்பினார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண அபிவிருத்தி என்பது கொரோனாவால் அதிக இழப்புகளை சந்தித்தது. அதன் பின்னர் பொருளாதாரத்தில் வங்குரொத்தான நாடாக மாற்றியது. இந்த அனர்த்தம் என்பது ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்தது.
எதிர்காலம் என்பது பொருளாதார ரீதியாக சூனியமான நிலையாக இருக்கிறது. வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் எமக்கு மிக மிக அவசியமானது யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகமும் பலாலி விமான நிலையமும் இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டும். அது அபிவிருத்தி செய்யப்படுவதன் ஊடாகத்தான் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய உணவுப் பொருட்கள், புடவைகள் போன்றவைகள் கொழும்புக்கு வந்து, கொழும்பு ஊடாக யாழ்ப்பாணம் வருவதன் மூலம் விலை அதிகரிக்கிறது. அது வந்து சேர்வதற்கு பல நாட்கள் ஆகிறது. அப்படியான சூழலில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவும் பல்வேறுபட்ட வழிகளில் அது எங்களுக்கு கூடுதலான பொருளாதார ரீதியான பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு மாகாணம், அனுராதபுரம், திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்து வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அமைச்சர்கள் இதனை சாத்தியமில்லை என பேசுகிறார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் தோல்வியில் முடிந்த துறைமுகமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகமும் தோல்வியில் முடிவடையும் எனச் சொல்லியிருந்தார்கள். அதனை தற்போது செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து பட அமைச்சர்கள் கூறும் நிலை உள்ளது. உண்மையில் அவ்வாறில்லை.
அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது சீனாவின் கைவசம் போய் இருப்பதுடன் முழுக்க முழுக்க கடன் வாங்கி செய்யப்பட்ட விடயம். காங்கேசன்துறை துறைமுகத்தை பொறுத்த வரை தாங்கள் அதற்கான நிதியை அன்பளிப்பாக தருவதாக கூறியிருக்கிறார்கள். அந்த நிதியை வைத்து கொண்டு நிச்சயமாக காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.
விமான நிலையத்தை விஸ்தரிப்பதன் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட நிறைய சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வரமுடியும். அவ்வாறு வருவதன் ஊடாக யாழ்ப்பாணம் மாத்திரம் அல்ல வடக்கு மாகாணத்தின் பெரும் பகுதி பல்வேறுபட்ட வளர்ச்சியை அடைவதற்கு துணை புரியும். இந்தியாவோடு மாத்திரம் அல்ல – விமான நிலையம் விஸ்தரிக்கப்படும்போது வேறு பல நாடுகளிலிருந்து இங்கு விமானம் வந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அவ்வாறான தொடர்பாடல் ஏற்படுவதன் மூலம் இங்கு முதலீடுகள் அதிகரிக்கும். தொழிற்சாலைகள் அதிகரிக்கும்.
எங்களுடைய இளைஞர் யுவதிகளுக்கு மாத்திரம் அல்ல தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்கம் இதற்கான அனுமதியை கொடுக்காமல் நீண்ட காலமாக தாமதித்து கொண்டு வருவது ஏற்புடைய விடயம் அல்ல. அந்த தாமதம் என்பது ஒரு பக்கத்தில் பார்க்கின்ற பொழுது நாடு மிக மோசமான பொருளாதார பிரச்சினைக்குள் மாட்டியிருக்கிறது. இன்று ஏற்பட்டுள்ள அனர்த்தம் என்பது நாட்டை இன்னமும் அதள பாதாளத்துக்குள் தள்ளுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் அல்ல எனக் கூறக்கூடியவர்கள் – யாழ்ப்பாணத்திற்கோ வடக்கிக்கோ கிடைக்கக்கூடிய அபிவிருத்திகளை ஏன் தடை செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக கிடைக்கக்கூடிய நிதியைக் கொண்டு இந்த அபிவிருத்தியை செய்யலாம். இதற்கான நிதியை திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமும் அல்ல.
குறைந்தபட்சம் கொரோனாவுக்கு பின்னர் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும்போது இலங்கை அரசாங்கம் முக்கியமாக இந்தத் துறைமுகம் விமான நிலைய அபிவிருத்திகளுக்கு வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து அதற்கான ஒப்புதலை கொடுப்பதன் ஊடாக இந்தியா அந்த விடயங்களை கரிசனை எடுத்து செய்து முடிப்பதன் ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை செய்ய முடியும் என நம்புகிறோம் – என்றார்.


















