-சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சசிகரன்-
யாழ்ப்பாண பல.நோ.கூ.சங்கம் வினைத்திறன் மிக்க கூட்டுறவுச் சங்கமாக புதிய ஆண்டில் காலடி வைப்பதற்கு சகல கூட்டுறவு பணியாளர்களும் ஒன்று சேர்ந்து சேவையாற்றுவதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சசிகரன் தெரிவித்தார்.
சங்கத்தில் நடைபெற்ற ஒளிவழாவில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அன்பு, கருணை, இரக்கம் கொண்டவர்களாக நாம் இருக்கவேண்டும். நாம் மற்றவர்களுக்கு பாவம் செய்யக் கூடாது. இரக்கமாக செயற்பட வேண்டும். மனித வாழ்வில் மற்றவரை மதிக்கவேண்டும். மற்றவரை பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது. இதையே இயேசுவின் நற்சிந்தனை எடுத்துக் காட்டுகிறது.
கூட்டுறவுத் துறையில் பல வருடங்கள் சேவையாற்றி சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பணியாளர்களுக்கு ஏனைய பணியாளர்கள் மதிப்பளியுங்கள். சங்கத்திற்கு விசுவாசமாக செயற்படுங்கள். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் கூட்டுறவு பல்வேறு செயற்பாடுகளுடன் பரிணாமம் பெறும். அடுத்த ஆண்டில் கூட்டுறவின் செயற்பாடுகளை அதிகரிக்க அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.
யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள குறித்த கூட்டுறவுச் சங்கத்தை வினைத்திறன் மிக்க சங்கமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து பணியாளர்களும் கூட்டுறவாக உழைக்க முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.


















