-தமிழ் தரப்பிடம் ஜெய்சங்கர் உறுதி-
-சொ.வர்ணன்-
யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுக அபிவிருத்தியை இந்தியா 2026 நிறைவில் முழுமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.
இச் சந்திப்பு குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முக்கியமான மூன்று தலைப்புகள் பற்றி விரிவாக கலந்துரையாடினோம். இந்தியாவுக்கும் வட மாகாணத்திற்கும் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துகின்ற கடல் மற்றும் ஆகாய பயணங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடினோம்.
காங்கேசன்துறை துறைமுகம் வணிக நீதியான துறைமுகமாக இன்னும் அபிவிருத்தி செய்யப்பட அமைதி தொடர்பில் இந்தியா வெளிவிவகார அமைச்சரிடம் எமது ஆதங்கங்களை முன்வைத்தோம்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர் காங்கேசன் துறைமுக அவிவிருத்தியில் இந்தியா முழுமையான பங்களிப்பினை வழங்கும்.
2026 நிறைவடைவதற்கு முன்னர் காங்கேசன்துறைமுக அபிவிருத்தியை முழுமைப் படுத்துவதற்கு இந்தியா எதிர்பார்த்து உள்ள நிலையில் அதற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
அதேபோல் யாழ்ப்பாண விமான நிலையத்தின் அபிவிருத்திகள் முழுமைப்படுத்தப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டிய போது அவர் எங்களிடம் குறித்த விமான நிலையம் வருமானம் குறைவாக உள்ளதாக கூறப்படுவது தொடர்பில் எம்மிடம் கேள்வி எழுப்பினார்.
நாம் அவரிடம் விமான நிலையத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இருந்து வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம் வருகை தரும் உறவுகள் கட்டுநாயக்கா ஊடாக யாழ்ப்பாணம் பெறுவதற்கு சுமார் எட்டு மணித்தியால தரைவழி பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அவர்கள் இந்தியா சென்று அங்கிருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு வருவதற்கு ஆவலாக இருக்கின்ற நிலையில் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு எடுத்து தரப்படுகின்ற பொதியின் அளவு கட்டுநாயக்கா ஊடாக எடுத்து வர அனுமதிக்கப்படும் பொதியின் அளவை விட அரைவாசி குறைவாக இருப்பதால் அவர்களால் பயணம் செய்ய முடியாமல் உள்ளமை தொடர்பில் சுட்டிக்கட்டினோம். அதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் யாழ்ப்பாண விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசு விருப்பமாகத்தான் உள்ளது. விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நான் விசேடமாக கவனம் செலுத்தி ஒரு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
மேலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லை இந்தியா அழுத்தம் வழங்கினால் மட்டுமே தேர்தலை வைப்பார்கள் என கூறினோம்.
கடந்த அரசாங்கங்கள் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் அதற்கு மேல் சென்று தீர்வை வழங்குவோம் என கூறியது ஆனால் தேசிய மக்கள் சக்தி பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரங்களை பகிர்வதற்கும் அவர்களுக்கு மனதளவில் விருப்பம் கிடையாது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா மாகாண சபை தேர்தல் தொடர்பில் கரிசனையாக உள்ளது அரசாங்கத்தை நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவோம் என தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச் சந்திரன் மேலும் தெரிவித்தார்.


















