-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்-
-த.சுபேசன்-
கைதடி அஞ்சலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கைதடி அஞ்சலத்தின் முன்னாள் அஞ்சல் அதிபர் அமரர் கார்த்திகேசு ஆறுமுகம் நினைவாக அவரது மகன் ஆறுமுகம் சூரியகுமாரனால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் நிரந்தர அஞ்சலக கட்டிடம் அமைப்பதற்காக காணி உறுதி எழுதப்பட்டிருந்த நிலையில் அப்பணி தடைப்பட்டிருந்தது.
நீண்ட காலம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற காலத்தில் அஞ்சலக கட்டடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்றும், விரைவாக கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அஞ்சல்மா அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் காணி இருந்தும் கட்டிடம் இல்லாத அனைத்து அஞ்சலகங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி யாழ்.மாவட்டத்தில் கைதடி, அச்சுவேலி ஆகிய இரு அஞ்சலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் முன்னர் 2006 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடைபெற்றது என்பதனையும், கட்டிட திணைக்களம் வேலைகளை ஆரம்பித்து திடீரென நிறுத்திய காரணத்தையும் விசாரணை செய்து உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் கோருகின்றோம்.
ஏற்கனவே மாமனிதர் ரவிராஜ் அடிக்கல் நாட்டிய கட்டிடத்துக்கு இரண்டாவது தடவை அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் உள்ளிட்ட கைதடி வட்டார உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை ஏன் என்பதனையும் உரிய அதிகாரிகள் தெரியப் படுத்த வேண்டும்.
தென்மராட்சி மேற்கில் உள்ள கைதடி அஞ்சலகம் முழுமையான அனைத்து வசதிகளும் கொண்டதாக தரமுயர்த்தப்பட வேண்டும் என எமது மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.


















