-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்-
-த.சுபேசன்-
கைதடி பொது விளையாட்டு மைதானத்துக்கு மாமனிதர் ரவிராஜ் பொது விளையாட்டு மைதானம் என பெயரிடப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கைதடி வடக்கு வட்டாரத்தில் அமைந்துள்ள பிரதேச சபையின் ஒரே ஒரு விளையாட்டு மைதானமான கைதடி பொது விளையாட்டு மைதானம் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட போட்டிகள் நடத்தக்கூடிய வகையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட வேண்டும்.
முதலில் முழுமையான திட்ட முன்மொழிவு ஒன்று உருவாக்கி அதன் அடிப்படையில் செலவறிக்கை தயாரிக்கப்பட்டு புனரமைப்பு வேலைகள் நடைபெற வேண்டும்.
அத்துடன் பிரதேச சபையின் 2025 ஆம் ஆண்டு பாதீட்டில் கைதடி விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 இலட்சம் ரூபாவை முழுமையாக பயன்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். 2025ஆம் ஆண்டில் நிதியை பயன்படுத்த முடியாது போனால் மேற்படி நிதியை குறித்தொதுக்கி 2026 ஆம் ஆண்டு முழுமையாக பயன்படுத்த சபை அங்கீகாரம் வழங்க வேண்டும்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவின் போது கைதடி பொது விளையாட்டு மைதான புனரமைப்புக்கு ஏற்கனவே உள்ள 20 இலட்சம் ரூபாவுடன் மேலதிகமாக 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அத்துடன், தென்மராட்சி மக்களின் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் பெயரில் கைதடி வடக்கு வட்டாரத்தில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்துக்கு ‘மாமனிதர் ரவிராஜ் விளையாட்டுத்திடல்’ என பெயரிடப்பட்டு அழைக்கப்பட வேண்டும் என என்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பிரதேச சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.


















