-த.சுபேசன்-
வர்த்தக நிலைய பெயர் மாற்ற விடயத்தில் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் செயலாளரை பலிக்கடா ஆக்குவது பொருத்தமற்றது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இவ் விடயத்தைச் சுட்டிக்காட்டி மேலும் தெரிவிக்கையில் :
சாவகச்சேரி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை தற்போது வர்த்தக நிலையங்களை நடத்தும் வர்த்தகர்களிடம் இருந்து 10வருட வாடகைப் பணத்தைப் பெற்று அவர்களுடைய பெயர்களுக்கே பெயர் மாற்றிக் கொடுப்பது என சபையின் 2023 ஆம் ஆண்டு சபை கலையும் முன்னர் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
மேற்படி தீர்மானத்திற்கு அப்போதைய சபையின் செயலாளர் உடன்படாத போதிலும் சபை தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது 20வருட வாடகைப் பணத்தைப் பெற்று கடைகளை பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் 10வருட வாடகைப் பணத்தை மாத்திரம் பெற்று பெயர் மாற்றம் செய்ய முயற்சித்த காரணத்தினால் அப்போதைய சபையின் செயலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சபை எடுக்கும் தீர்மானத்திற்கு செயலாளர் எவ்வாறு பொறுப்பாளி ஆக முடியும். இது தொடர்பில் அப்போதைய செயலாளரை பலிக்கடா ஆக்குவது பொருத்தமற்றது என்றார்.


















