செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்த ஆய்வின் போது, புதைகுழியினுள் மழையால் தேங்கி நின்ற வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் பவுசர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த இடத்தின் தற்போதைய நிலமைகளை நேரில் பார்வையிட்ட நீதவான் எஸ். லெனின்குமார், எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி அடுத்த வழக்கு விசாரணைகாக திகதியிட்டார். அன்றைய தினமே புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
இதனிடையே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட பாதீட்டையும் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.















