செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து சான்றுப் பொருளாக மீட்கப்பட்ட ஒரு காலணி 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் யாழ்.நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் நேற்று திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் முன்னிலையாகியிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மனிதப் புதைகுழியில் இருந்து 25 ஆம் இலக்கமாக அடையளமிடப்பட்டு சான்றுப் பொருளாக மீட்கப்பட்டிருந்த காலணி தொடர்பான அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த அறிக்கையில் சான்றுப் பொருளான காலணியின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், 39 ரூபா 90 சதம் என விலை பொறிக்கப்பட்ட இந்த காலணி 1985 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வெளிவந்ததாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அது 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


















