உள்நாட்டு நிபுணர்களின் பெயர்கள் பரிந்துரைப்பு
செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான உள்நாட்டைச் சேர்ந்த 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.
அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் முன்னிலையாகியிருந்த குறித்த மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மேற்படிக் குழுவை பரிந்துரைத்திருந்தார்.
மேலும் அந்த ஆய்வுகள் செய்வதற்கான பாதீட்டையும் (நிதிச் செலவு அறிக்கை) சட்டவைத்திய அதிகாரி மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
என்புக்கூடுகளை ஆராய்வதற்கு, அகழ்வுப் பணியில் கடமையாற்றி வந்த சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் உள்ளடங்கலாக, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி உள்ளிட்ட புதைகுழிகளில் மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வு செய்த நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்று, நிதி ஒதுக்கப்பட்டதும், அதன் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, அங்கு மீட்கப்படுகின்ற எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வு செய்றதற்கு சர்வதேச நிபுணத்துவத்தை பயன்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதுடன், கடந்த வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனாலும் இவ்விடயம் வலிறுயுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















