-த.சுபேசன்-
கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர் சிலை அதே மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கலைஞானி குமரநாதனின் கைவண்ணத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கலைஞானி குமரநாதன் திருநாவுக்கரசர் சிலையை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரு தடவைகள் குறித்த சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிலையை சேதப்படுத்திய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய நிதிப் பங்களிப்பில் மீளவும் கலைஞானி குமரநாதனால் சிலை அமைக்கப்பட்டு தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுதர்சனால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















