-சொ.வர்ணன்-
யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கலந்து கொண்ட போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இ.போ.ச.வுக்கு சொந்தமான 70 பேருந்துகள் வரை பொதுமக்களை அழைத்துச் செல்ல ஈடுபடுத்தப்பட்டமையால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பல போக்குவரத்துச் சேவைகள் இரத்தாகின.
இதனால் யாழ். நகரிலிருந்து மக்கள் தமது பிரதேசங்களக்கு பயணிக்க் முடியாத நிலையில் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகினர்.
யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கான உள்ளுர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்கள் பாரிய அசௌகரிங்களுக்கு உள்ளாகினர்.
யாழ் மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பேருந்து பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்துகளை விசேட கட்டணங்களில் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்.


















