அமெரிக்காவில் தங்கள் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடர் மற்றும் பிற தயாரிப்புகளால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர ஜொன்சன் & ஜொன்சன் நிறுவனம் 5.5 பில்லியன் வரை இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
திட்டமிட்டபடி அடுத்த ஆண்டில் 3 பில்லியன் வரை வழங்கப்படும் என்றும், மீதித் தொகை 2028-க்கு பின்னரே செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தை 95 விகிதம் வழக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது இறுதி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுக்கும், ஜொன்சன் & ஜொன்சன் இச்சட்டப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் வைத்திய சாதனங்களை உருவாக்கும் தங்கள் முதன்மை நோக்கில் கவனம் செலுத்தவே இம்முடிவை எடுத்ததாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் தெரிவித்துள்ளார்.
டால்க் கனிமத்தில் புற்றுநோயை உண்டாக்கும் ‘ஆஸ்பெஸ்டாஸ்’ கலந்திருப்பதாகக் கூறி 2009 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
மேலும், டால்க் பாதுகாப்பானது என நிறுவனம் தொடர்ந்து கூறி வந்தாலும், 2022-இல் டால்க் அடிப்படையிலான பவுடர் தயாரிப்பை நிறுத்திவிட்டு, சோள மாவு அடிப்படையிலான பவுடர்களுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

















