வல்வெட்டித்துறை, சுன்னாகத்தில் சம்பவம்
-சி.ஜெகதீஸ்வரன்- , -க.கனகராசா-
யாழ்ப்பாணத்தின் இருவேறு பகுதியில் தனிமையில் வசித்து வந்த இரண்டு வயோதிபப் பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வல்வெட்டித்துறை பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த பிறேமச்சந்திரன் வதனராணி (வயது 73) என்பவராவார்.
வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் அவர் உயிரிழந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
மேற்படி பகுதியில் சில காலமாக தனிமையில் வசிப்பவர்கள் உயிரிழக்கும் நிலையில் துர்நாற்றம் வீசிய பின்பே சடலமாக மீட்க்கப்படுவதாக மரண விசாரணை அதிகாரி தகவல் வெளியிட்டார்.
இதே போன்று சுன்னாகம் ஆறுமுகம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்த வயோதிப மாது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா சந்திரா (வயது 70) என்பவராவார்.
சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று திங்கட்கிழமை மாலை சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.


















