ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதற்கான விசேட அமர்வு நேற்று தவிசாளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு இறுதியில் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
வாக்கெடுப்பின் போது ஈ.பி.டி.பி 4 உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 8 வாக்குகள் எதிராகவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 3, ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணி ஒருவரும், தமிழரசுக்கட்சி உருவருமாக 5 வாக்குகள் ஆதரவாகவும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாகின்றது.
















