-நல்லூரில் மாவீரர் கல்வெட்டு திறந்து வைப்பு-
-பல இடங்களிலும் உணர்வுபூர்வ அஞ்சலி-
மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வருடந்தோறும் நவம்பர் 21 ஆம் திகதி முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் துயிலுமில்லங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தப்படுகின்றது.
அந்தவகையில் நேற்றையதினம் மாவீரர் தினம் ஆரம்பமான நிலையில் வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நேற்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்பொழுது பொதுச்சுடரினை மாவீரர்களின் உறவினர் ஒருவர் ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உணர்வெழுச்சியுடன் ஆரம்ப நிகழ்வில் பங்கெடுத்தனர். இதன்போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

வலி வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மூன்று மாவீரர்களின் தந்தையான மகேந்திரம் பொது நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன், சபை அலுவலகத்துக்கு முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சபை அமர்வின் இறுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை பல உள்ளுராட்சி மன்றங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டதோடு வன்னியிலுள்ள தயிலுமில்லங்களிலும் உறவுகள் ஒன்றுகூடி சுடர் ஏற்றி மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டித்தனர்.
கிழக்கு மாகாணத்திலும் மாவீரர் நாள் துயிலுமில்லங்களில் விளக்கேற்றி அனுஷ்டிக்கப்பட்டது.















