-சுரேஷ் பிரேமச்சந்திரன்-
தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வானது ஒற்றையாட்சிக்கு வெளியேதான் இருக்க முடியும் என்பதில் தமிழ் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவுகிறது. அது சமஷ்டியாகவோ, தேசங்களின் கூட்டாட்சியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அமையலாம். ஆகவே புதியதோர் அரசியல் சாசனமானது தமிழ் மக்களுக்கான எத்தகைய தீர்வை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதில் தமிழ்த்தரப்பு அனைத்தும் ஒருமித்த கருத்துக்கு வந்து அந்த விடயம் அரசிற்கு முன்மொழியப்பட வேண்டும்.
சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபொழுது, பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் ஒரு தீர்வு முன்மொழியப்பட்டு அது பாராளுமன்றம் வரை வந்தது. இதனைப் போலவே இன்னும் பல முன்மொழிவுகள் இருக்கின்றன.
ஆகவே, தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி சரியான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதே பொருத்தமானதாக இருக்கும். இதனை விடுத்து நான் மாத்திரமே சமஷ்டியைப் பற்றிப் பேசினேன் என்றும் மற்றவர்கள் வாய்மூடி இருந்தார்கள் என்றும் கூறுவது குறுகிய அரசியல் லாபம் கொண்டதாக இருக்குமே தவிர, அர்த்தபுஷ்டியான ஒரு தீர்வை நோக்கிச் செல்கின்ற வழிமுறையாக இருக்காது.
தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாது. புலம்பெயர் தேசத்திலிருப்பவர்களும்கூட சமகால அரசியல் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, பிராந்திய, உலக அரசியல் நிலைமைகளைப் புரிந்துகொண்டு, தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய முடிவுகளை நோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, அவர்களுடைய அணுகுமுறைகள் கொள்கைகள் என்பவை புலத்தில் இருப்பவர்களின் முயற்சிகளை முறியடிப்பதாக இருக்கக்கூடாது.


















