-தவிசாளர் யுகதீஸ் குற்றச்சாட்டு –
-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா என்று பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் யுகதீஸ் கேள்வி எழுப்பினார்
ஏனைய பிரதேசங்களில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்ற போதிலும் நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் மட்டும் கூட்டம் நடைபெறவில்லை
வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தன்னுடைய முகநூலில் 23 ஆம் திகதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். பின்னர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிற்போடப்பட்டிருப்பதாக அதே முகநூலில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக பிரதேச செயலர் உட்பட அதிகாரிகள் பலர் அறிந்திருக்கவில்லை. அதன் பின்புதான் கூட்டம் பிற்போடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்பு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால்த்தான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நாம் விடயங்கள் தொடர்பில் கலந்து ஆலோசிக்க முடியும்.
நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற முடியாதது கவலை அளிக்கின்றது. வடமராட்சி கிழக்கு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல்வேறு காணப்படுகின்றன.
இவர்கள் திட்டமிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை புறக்கணிக்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.வருகின்ற ஆண்டு பல காப்பெட் வீதிகள் யாழ் மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட போதும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு எந்த ஒரு காப்பீடு வீதியும் ஒதுக்கப்படவில்லை
வடமராட்சி கிழக்கில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் இவ்வாறு அபிவிருத்தி குழு கூட்டங்களை நடத்தாது விடுவது திட்டமிட்டு எங்களுடைய மக்களை புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகும்.; என அவர் மேலும் தெரிவித்தார்.


















