-விகாரையால் காணிகளை இழந்த மக்கள் பகிரங்க அழைப்பு
-அமைச்சர், எம்.பிக்களின் நடவடிக்கை குறித்தும் கடும் அதிருப்தி
-நாளை உங்கள் காணிகளும் விகாரையாகும் எனவும் எச்சரிக்கை
-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்-
வலி.வடக்கு தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையில் மீண்டும் ஒரு புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்கு எதிர்வரும் 3 ஆம் திகதி அனைவரும் அணிதிரளுமாறு சட்டவிரோத திஸ்ஸா விகாரையால் காணியை இழந்த மக்கள் அழைப்பு விடுத்தனர்.
நேற்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பினை விடுத்த அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 18 பேருடைய தனியார் காணி. உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்ட இந்த விகாரைக்கு எதிராக சுமார் 3 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் எனக் கூறும் இந்த அனுர அரசாங்கம் இந்த காணிகளை விடுவிப்பதில் இரட்டை வேடம் போடுகிறது.
நாங்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த ஆட்சிக் காலத்திலும் இந்த காணி தனியாருடைய காணி என்பதற்கான சகல ஆதாரங்களையும் சமர்ப்பித்து விடுவிக்குமாறு கோரிய நிலையில் தற்போதைய அமைச்சர் சந்திரசேகரன் உறுதிகளை ஆராய வேண்டும் எனக் கூறுகிறார்.
நீங்கள் எங்களின் உறுதிகளை ஆராயாமல் காணிதர வேண்டாம். எங்கள் உறுதிகள் அனைத்தும் 1912 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து முறையாக இருந்தமைக்கான பதிவுகள் அனைத்தும் எம்மிடம் திணைக்களங்களிடமும் உள்ளது.
தற்போது சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு மீண்டும் ஒரு புத்தர் சிலையை கொண்டு வருவதற்கு எதிர்வரும் மூன்றாம் திகதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
தையிட்டி போராட்டத்தை விமர்சிக்கும் எம்மவர்களிடம் கேட்க விரும்புவது இந்த போராட்டம் சைக்கிள் கட்சியினுடைய போராட்டம் அல்ல.
நாங்கள் எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டமைக்கு எதிராக அனைத்து கட்சியினரிடமும் எமது கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எம்மோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்களே முன் வந்தார்கள்.
நாங்கள் யாரையும் குறை கூறுவதற்காக கூறவில்லை எமது போராட்டம் எமக்கானதாக மட்டும் நினைத்து விட வேண்டாம்.
இன்று தையிட்டி மக்களின் காணிகளில் எப்படி விகாரை அமைக்கப்பட்டதோ அவ்வாறே நாளை உங்களுடைய காணிகளிலும் விகாரை அமைக்கப்படும். கேட்டால் இது பௌத்த சிங்கள நாடு என கூறுவார்கள்.
தற்போது வவுனியாவில் புதிதாக புத்தர் சிலை முளைக்கிறது. அதேபோல் உங்கள் வீடுகளின் பின்புறமும் புத்த விகாரைகளை அமைப்பார்கள் நாங்கள் கேள்வி கேட்க முடியாதவர்களாக தொடர்ந்து ஆளாக்கப்படுவோம்.
நாங்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்களோ, சிங்கள மக்களுக்கு எதிரானவர்களோ அல்ல. திட்டமிட்ட ஆக்கிரமிப்பு பௌத்தத்திற்கு எதிரானவர்கள்.
அண்மையில் நயினாதீவு நாக விகாரதிபதியை சந்தித்தபோது அவரே கூறுகிறார், தையிட்டு திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக தனியார் காணிகளில் கட்டப்பட்டுள்ளது. புத்த பெருமான் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து தனக்கு விகாரை கட்டுமாறு இந்த இடத்திலும் வலியுறுத்தியது கிடையாது என்று. இந்த விகாரைப் பிரச்சனை தொடர்பில் தன்னை எவரும் அணுகவில்லை அணுகியிருந்தால் தையிட்டியில் விகாரைக்குரிய காணி திஸ்ஸ விகாரை சங்கத்தினருக்கு சொந்தமில்லை என்பதை உறுதி ஆதாரத்துடன் கூறியிருப்பேன் என்றார்.
ஆனால், எமது மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுநர் இந்த தையிட்டி மக்களுடைய காணிகளை மீள பெற்று கொடுப்பதற்கு மாறாக அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள்.
அரசாங்க அதிபர் தனது வாகனத்தில் இருந்த பெயர் பலகையை கீழே இறக்கி வைத்து விட்டு திஸ்ஸ விகாரைத் தேரரை சந்திக்கச் சென்றார். ஏன் அவ்வாறு ஒளிந்து வர வேண்டும். நீங்கள் மக்களுக்கு நேர்மையாக நடப்பீர்களானால் காணிய இழந்த எங்களையும் அழைத்துக் கொண்டு விகாராதிபதியுடன் பேசி இருக்க வேண்டும்.
அதே போல பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் பவானந்தராஜா நாங்கள் பேசுவதற்கு நேரம் கேட்டால் ஓடிவிடுகிறார்கள். அமைச்சருடன் சந்திக்க சென்றோம். அங்கே அவரின் கையாள் ஒருவர் எமக்கு கூறினார் சிங்கள மக்கள் தையட்டியில் அதிகமாக வாழ்ந்தவர்கள் என்று நயினாதீவு விகாராதிபதி எமது நியாயமான போராட்டத்தை ஆதரித்துள்ள நிலையில் எங்களில் சிலர் கேட்கிறார்கள் விகாரை காட்டும் வரை எங்கிருந்தீர்கள் என அவர்களிடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். விகாரை கட்டும்போது எமக்குத் தெரியாது. கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக எதிராக போராடி வரும் நிலையில் மூன்று புதிய கட்டடங்களை விகாரைக்குள் கட்டி விட்டார்கள் தடுக்க முடிந்ததா?
தற்போது மீண்டும் ஒரு புத்தர் சிலையை வைப்பதற்காக வருகிறார்கள். இப்போதும் நாங்கள் கேலிப் பேச்சுகளும், கட்சிகளை வசை பாடுவதையும் விடுத்து எமது இனத்தைக் காக்க ஒன்றினைந்து எதிர்ப்பினை வெளியிட வருமாறு அனைவரையும் அழைக்கிறோம் என்றனர்.


















