யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பினும், எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.
எனினும் யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி சகல வணக்கத்தலங்களிலும், 15ஆம் திகதி சகல அரச நிறுவனங்களிலும், 16ஆம், 17ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன.
இந்தக் காலப்பகுதியில் சகல வீடுகளிலும், வேலைத்தளங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்பட்டு, மேற்பார்வைக்குழுக்களால் குறித்த இடங்கள் மேற்பார்வை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















