-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்-
-அன்ரனி திலக்-
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார் அராஜகமாக நடந்து கொள்வதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணியாகும். அந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம்,வுனியா,கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர் இலங்கையில் இருக்கிறார்கள்.
தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அதில் எல்லோராலும் எல்லா நேரத்திலும் பங்குபற்ற முடியாது. குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் பங்குபற்றி வருகிறார்கள். தையிட்டி காணி மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பதில் காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு உறுதியாக இருக்கிறது
தையிட்டி காணிக்குரிய மக்களை நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புக்கு அழைத்துச் சென்று பௌத்த சாசன அமைச்சரை சந்தித்து மக்கள் தங்களுடைய விடயங்களை எடுத்துக் கூறிய நிலையில் மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதை அமைச்சரும் ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதற்குப் பிற்பாடு இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை. அதிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு பொலிஸார் தற்போது இருக்கிறார்கள். தங்களுடைய காணியை மீட்பதற்காக போராட்டம் நடத்தும் மக்களை பொலிஸார் விரட்டுகிறார்கள்.
அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் அராஜகத்திற்கு எதிராக காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு வெகு விரைவில் மிகப்பெரிய போராட்டங்களை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


















