-மாற்றுக்காணி அல்லது இழப்பீடே இறுதி தீர்வு-
-விடுவிக்கக்கூடிய 2 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்-
-இன – மத முறுகல்களுக்கு தூபமிடவேண்டாம்-
-சொ.வர்ணன்-
யாழ்.வலி, வடக்கு – தையிட்டி விகாரை பிணக்கை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக் கைகளை அராங்கம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மாற்றுக் காணி அல்லது இழப்பீடே அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் கூறினார்.
தையிட்டியில் மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மற்றும் போராட்டத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தையிட்டி விகாரையால் நிலத்தை இழந்த மக்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு வழங்குவதுதான் அரசாங்கதின் இறுதித் தீர்மானம். விகாரை தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம்.
அது எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதல்ல. ஆது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் என்ற அடிப்படையில் பிரச்சினையை நீடிக்க இடமளிக்காமல் உடனடியாக முடிவுறுத்தவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
ஆகவே, திஸ்ஸ விகாரையினால் நிலத்தை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது காணியின் பெறுமதிக்கேற்ப இழப்பீடு வழங்கப்படும். அதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. ஆனால் மாற்றுக் காணி பெறுவதற்கு எத்தனை பேரிடம், காணிக்கான ஆவணங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் தீவிரமான அரசியலாக மாறிக்கொண்டிருக்கிறது. அல்லது மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இடமளிக்க முடியாது. நாட்டில் மூவின மக்களும் ஒன்றாக வாழவேண்டும் என்பதே, எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு, அதற்காகவே பயணித்துக்கொண்டிருக்கிறோம். மதம், இனம் என்ற பேதங்களின் அடிப்படையில் மோதல்களை உருவாக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. ஆகவேதான், அரசாங்கம் ஒரு இறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.
விகாரை அமைந்துள்ள நிலத்திற்கு சொந்தமான மக்களுக்கு மாற்றுக் காணி அல்லது இழப்பீடு வழங்கப்படும், மற்றைய விடுவிக்ககூடிய 2 ஏக்கர் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


















