-பொது வைத்திய நிபுணர் மருத்துவர் பேரானந்தராசா –
-சி.ஜெகதீஸ்வரன்-
தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க சத்தான உணவுகளை எமது உடலுக்கு ஏற்ற உணவுகளை எடுக்க வேண்டும். மது மற்றும் புகைத்தலை தவிர்த்து மனதை திடப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என பொது வைத்திய நிபுணர் மருத்துவர் த.பேரானந்தராசா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் செல்லத்துரை பிரசாத் எழுதிய கொலஸ்திரோல் நோய் எனும் பொதுமக்களிற்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை சூரியமஹால் திருமண மண்டபத்தில் பொது வைத்திய நிபுணர் க.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொலஸ்திரோல் தவிர்க்கக் கூடிய ஒரு நோய். சிறு மாற்றங்களே பெரிய பலன்களைத் தரக்கூடியவை. பொதுவாக நடத்தல் வேண்டும். காலையில் அல்லது மாலையில் 30 நிமிடமாவது நடக்க வேண்டும். கூடியளவு உணவில் மரக்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது இரத்தத்தில் கொழுப்பின் அளவு மற்றும் சீனியின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். அதை விட போதியளவு தூக்கம் முக்கியம்.
இளவாலையைச் சேர்ந்த வைத்தியர் செல்லத்துரை பிரசாத் எழுதிய இந்நூல் பொதுமக்களிற்கு தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றாத வாழ்க்கை முறையின் மூலமான வருத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
25 , 30 வருடங்களுக்கு முன்னென்றால் கொலறா, மலேரியா, நெருப்புக் காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் மிக முக்கிய வருத்தங்களாக காணப்பட்டன. இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே இந்த தொற்றா நோய்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக் கால்வாய்க்குள் போகும் உணவுகள் உடம்பிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவுகள் நல்லதாக சத்துள்ளதாக கொழுப்பு அற்றதாக இருக்க வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மதுப் பாவனை அற்று இருக்க வேண்டும். மனதைத் திடப்படுத்த வேண்டும். தேவையற்று மனதைக் குழப்பக்கூடாது. இவையே வாழ்வின் மூல மந்திரங்களாக .இருக்கட்டும். ஒருவர் குறைந்தது ஆறு, ஏழு மணித்தியாலங்கள் தூங்க வேண்டும். தூக்கம் குறையக் குறைய வருத்தங்கள் கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















