-த.சுபேசன்-
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் 37 ஆக காணப்பட்ட பொதுக் கிணறுகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆக குறைவடையக் காரணம் என்னவென நகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்மையில் நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர்கள் இக்கேள்வியை எழுப்பியிருந்தனர்.
மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்;,
சபை எல்லைக்குள் காணப்படுகின்ற தொல்பொருள் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதுடன் நகரசபை சொத்துக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சபை எல்லைக்குள் காணப்படுகின்ற சுமைதாங்கிகள், பொதுக்கிணறுகள் மற்றும் பொதுமலசலகூடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அண்மைக் காலமாக இவ்வாறான மரபுரிமைச் சின்னங்களை அழிக்கின்ற மற்றும் தனியாரின் சொத்துக்களுடன் இணைக்கின்ற செயற்பாடுகள் பல சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இடம்பெற்றுள்ளன.
சபை எல்லைக்குள் 37 பொதுக் கிணறுகள் காணப்பட்ட நிலையில் தற்போது 21 கிணறுகளே காணப்படுகின்றன. அவற்றை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன,; காணாமல் போன பொதுக்கிணறுகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சில பொதுக்கிணறுகள் தனியார் காணிகளுடன் இணைக்கப்பட்டு இடித்து மூடப்பட்டுள்ளன.
எனவே நகரசபை விரைந்து நடவடிக்கை எடுத்து தனது சொத்துக்களை அடையாளப்படுத்தி பாதுகாப்பதுடன், தனியாரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுச்சொத்துக்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்திருந்தனர்.


















