குடிநீர் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் கல்லுண்டா பகுதியில் இன்று காலை முதல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குடிநீர் இன்றி தாமும், தமது பிள்ளைகளும் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து போராட்டப் பகுதிக்குச் சென்ற கிராம அலுவலர், போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.
எனினும், கிராம அலுவலருடன் மக்கள் முண்டியடித்து ஆவேசமாகப் பேசினர். மக்களைக் கட்டுப்படுத்த முடியாமலும், அவர்களுடன் பேச முடியாமலும் கிராம அலுவலர் நின்றார்.
இதன்போது மக்கள் தெரிவிக்கையில்,
நாங்கள் மனிதர் இல்லையா? குழந்தைகள் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை. அதிகாரிகளிடம் கூறி நாம் ஏமாந்துவிட்டோம். ஆகையால் எங்களுக்கு குடிநீர் வழங்குங்கள்.
வாகனம் பழுது என்று கூறுவதெல்லாம் பொய். அதற்கான ஆதாரங்களை நாங்கள் முன்வைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதன்பின்னர், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத கிராமஅலுவலர் நீங்கள் பிரதேசசபையில் வந்து பிரச்சினைகளை முன்வையுங்கள் என்று கூறிச்சென்றார்.
















