-இ.கலைஅமுதன்-
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல் துறையின் விரிவுரையாளரும், 1980 களில் யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் மற்றும் பெண்ணியற் செயற்பாடுகளிலே தன்னை அர்ப்பணித்தவரும், 1989இல் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட முறிந்த பனை என்ற நூலின் இணை ஆசிரியர்களில் ஒருவருமான அமரர் கலாநிதி ராஜனி திராணகமவின் 36 ஆவது வருட நினைவுக் கூட்டமும், ராஜனி திராணகம நினைவுப் பேருரையும் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். சேன். ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகே உள்ள சென். ஜோன்ஸ் த பப்டிஸ்ட் தேவாலயத்தின் பரிஸ் மண்டபத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்வில் ‘சமகால உலக ஒழுங்கில் நீதிக்கான சாத்தியம்/சாத்தியமின்மை’ என்ற தலைப்பிலே பொருளாதாரத்துக்கான லண்டன் கற்கை நிலையத்தின் பால்நிலை கற்கைகள் துறையின் வருகைநிலை பேராசிரியரான கிரண் கிரேவல் நினைவுப் பேருரை ஆற்றுவார். இவரின் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படும். உரையை தொடர்ந்து இடம்பெறும் கலந்துரையாடல் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெறும்.
ராஜனி திராணகம ஞாபகார்த்தக் குழுவினரும், சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள், சமூக நீதிச் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரினையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.


















