-க.கனகராசா-
டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் 30 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் பொலிகண்டி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 19 குடியிருப்பாளர்களிற்கும், அல்வாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் 9 குடியிருப்பாளரிற்கும், பொலிகண்டி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் இரண்டு குடியிருப்பாளரிற்கும் எதிராக நேற்று வெள்ளிக்கிழமை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷ், அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் க.கிருஸ்ணரட்சகன் மற்றும் பொலிகண்டி பொதுச்சுகாதார பரிசோதகர் ம.நந்தகுமார் ஆகியோரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ஆதன உரிமையாளர்களிற்கு தலா 10,000 ரூபா வீதம் 3,00,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.


















