-க.கனகராசா-
வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்க தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது இலங்கையின் சில மாகாணங்களில் ஏற்கனவே மாகாண மட்டத்திலான நூலக சேவைகள் பணியகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் மாவட்ட மட்டமும், பிரதேச செயலக மட்டமும் சார்ந்த நூலக சேவைகள் பணியகங்கள் செயல்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினர் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.
அத்துடன் மாகாண பொதுநூலகம் மற்றும் மாவட்ட பொதுநூலகங்களும் இதன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் குழுவினர் ஆளுநருக்கு விளக்கினர். மேலும்,புத்தக வெளியீட்டுக்கான உதவிகளைக் கோரி வடக்கு மாகாணத்திலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்கள் குறைவாக உள்ளதாக குழுவினர் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில்,வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் உருவாக்கப்படும் என்ற யோசனையை ஆளுநர் வரவேற்றதுடன் அதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
அத்துடன் இலத்திரனியல் நூலக சேவைகளை விரிவுபடுத்தவும், அதற்கான பயிற்சிகளை வழங்கவும் தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபை எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆளுநர் நன்றி வெளியிட்டார்.
புத்தக வெளியீட்டுக்கான உதவி தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















