வடமாகாண கைத்தொழில்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நாள் அமைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கூறினார்.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. ஆனையிறவு உப்பளமாக இருக்கலாம், இன்று அடிக்கல் நடப்படும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையாக இருக்கலாம்.
இவை அனைத்தும் வடக்கின் பொருளாதாரத்தின் உயிர் நாடிகள். இவற்றை மீள இயக்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இத்தொழிற்சாலை இயங்கிய காலத்தில், குளோரின், கொஸ்டிக் சோடா மற்றும் ஹைதரோ குளோரிக் அமிலம் போன்றவற்றை எமது மண்ணில், எமது மக்களின் உழைப்பிலேயே உற்பத்தி செய்தோம். ஆனால், கடந்த 40 வருடங்களாக இவற்றையெல்லாம் டொலர் கொடுத்து இறக்குமதி செய்து வந்தோம். அந்த நிலைமை மாற்றியமைக்கப்படப் போகின்றது.
இனிவரும் காலங்களில் எமது தேவை போக, எஞ்சியவற்றை ஏற்றுமதி செய்து டொலரை உழைக்கும் மையமாகப் பரந்தன் மாறப்போகின்றது. இந்த தொழிற்சாலை அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக இயங்கவுள்ளது. இவ்விடத்தில் நான் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன்.
நீங்கள் எமது மக்களின் அன்றாட நுகர்வுத் தேவைக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். எத்தனையோ எம்மவர்கள் எமது மண்ணில் முதலீடு செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். வாருங்கள், கைகோருங்கள்.
வடக்கில் அமையவுள்ள மூன்று பாரிய முதலீட்டு வலயங்களில் ஒன்று இந்தப் பரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ளது. இது எமது வடமாகாண இளையோருக்கு, குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்குப் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் – என்றார்.


















