-முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி-
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லை. கடற்புலிகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தாயகப்பரப்பிலிருந்த மீனவர்களின் வாழ்வாதாரம் தன்னிறைவு பெற்று செழித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறல் செயற்பாடுகளுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிற்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் இன்று மிகப் பாரிய ஒரு கவனயீர்ப்புப் போராட்டமொன்று மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கையேந்தி நிற்கும் நிலையினை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அட்டகாசமான செயற்பாடுகள் தொடர்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கடற்புலிகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் இல்லாமல் கடற்பரப்பை தனது பூரண கட்டுப்பாட்டில் நேர்த்தியாக வைத்திருந்தார்.
அந்தவகையில், விடுதலைப் புலிகளின் காலத்தில் வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் தமது கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தனர்.
ஆனால், தற்போது இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
குறித்த இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறல்களுக்கு எதிராகவும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராகவும் பாராளுமன்றில் தொடர்ச்சியாக நான் குரல் கொடுத்துவருகின்றேன்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் வாழும் எமது மீனவக்குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினைக் கொண்டுசெல்வதில் பல்வேறு இடர்பாடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இவ்வாறான தொரு இக்கட்டான நிலையிலேயே மீனவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒழுங்கான முறையிலே இந்த மீனவர்களுடைய கடற்றொழில் செயற்பாட்டை இந்த அரசாங்கம் பாதுகாக்கவேண்டும். இந்திய இழுவைப்படகுகளும், தென்னிலங்கையைச் சேர்ந்த சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில்செயற்பாடுகளும் நிறுத்தப்படுமெனில் எமது மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் எதனையும் வழங்கத் தேவையில்லை. எமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினைத் தாமே மேம்படுத்திக் கொள்வார்கள் – என்றார்.
















