திருகோணமலையிலும், திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் இன ஐக்கியத்திற்கும் ஒருபோதும் பங்களிக்காது என ஜனாநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளார் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருகோணேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தைச் சுற்றிவளைத்து புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதுடன், பௌத்த நிறுவனங்களை உருவாக்குகின்ற வேலைகளையும் மாறிமாறி வருகின்ற அனைத்து சிங்கள அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.
வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் மையப்புள்ளியான திருகோணமலையை சுற்றிவளைத்து ஏற்கனவே சேருவாவில என்ற பெயரில் சிங்களத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. மிச்சம் மீதியாக இருக்கின்ற தமிழ்ப் பிரதேசங்களையும் சிங்களமயமாக்குவதனூடாக வடக்கிற்கும், கிழக்கிற்குமான நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்வதென்பது ஒவ்வொரு அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதேவேளை, தமிழ் மக்கள் பாரம்பரியமாக தமது இறந்துபோன உறவுகளுக்கு ஈமக்கிரியைகள் செய்யுமிடமான கின்னியா வெந்நீரூற்று என்ற புராதான பகுதியானது பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதனை அவர்களே நிர்வகிப்பதையும் அங்கிருக்கின்ற சைவக் கோயில்களை இடித்தழிக்கும் நிலையையும் காணமுடிகின்றது.
இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வர முகப்பிலும் தனியார் ஒருவரின் காணியை ஆக்கிரமித்து அங்கு புத்தகோயில் கட்டப்பட்டுள்ளது. எனவே, மிக நீண்டகால வரலாற்றைக் கொண்ட சிவாலயங்களை புனிதப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வரும் வேளையில் அந்த இடங்களை ஆக்கிரமித்து வேறு மத சின்னங்களை உருவாக்குவதென்பது தமிழ் சைவ மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதுடன் அவர்களின் உணர்வுகளுக்கு விரோதமான செயற்பாடாகும்.
குறைந்தபட்சம் வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள் மதச் சார்பற்ற பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்தமான இன ஐக்கியத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் இது ஒரு முன்னோடி செயலாக அமையும் என்றார்.


















