-சி.ஜெகதீஸ்வரன்-
வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த கப் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் இடைமறித்து மடக்கிப்பிடித்த போதும் அதிலிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கப் ரக வாகனம் வடமராட்சி குடத்தனைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றியதையடுத்து வரணி மாசேரி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வேளை மாசேரி பகுதியில் கொடிகாமம் பொலிஸார் இடைமறித்துள்ளனர்.
எனினும் கப் ரக வாகனம் பொலிஸாரை மோதும் வகையில் பயணித்து தப்பியோடியுள்ளது. இந்த நிலையில் பொலிஸார் கப் ரக வாகனத்தை துரத்திச் சென்று பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் கறுக்காய்ப் பகுதியில் வைத்து முள்ளுக் கட்டையை வீதியின் குறுக்காக போட்டு மடக்கிப்பிடித்தனர்.
இந்நிலையில் கடத்தற்கார்கள் வாகனத்தை கைவிட்டு அதிலிருந்து தப்பித்தோடியுள்ளனர். இதையடுத்து பொலிஸார் மணலுடன் வாகனத்தை கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்துள்ள நிலையில் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்;.


















