தனியார் ஒருவருக்கு சொந்தமான கை ஒழுங்கை ஒன்றை வாய்க்கால் எனக் கூறி யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் காணி உரிமையாளர்களுடன் முரண்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கொண்டலடிப் பகுதியில் இடம்பெற்றது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் அது தற்போது பெரும் பேசுபொருகாகவும் மாறியுள்ளது.
குறித்த சம்பவம் தொடரில் தெரியவருகையில்,
நல்லூர் கொண்டலடி பகுதியில் தற்போது பெய்த அடை மழையால் ஏற்பட்ட அதிகரித்த வெள்ள நீரை மாநகரசபையினர் தனியார் ஒருவரின் காணியின் ஊடாக வெளியேற்றியுள்ளனர். இதன்போது யாழ் மாநகரசபையால் குறித்த காணியின் மதில் உரிமையாளரின் அனுமதியின்றி உடைக்கப்பட்டது.
குறித்த செயற்பாட்டை கண்டித்த காணி உரிமையாளருடன் யாழ் மாநகர உறுப்பினர்கள் தகராற்றிலும் ஈடுபட்டனர். இரு தரப்பினரிடையே தர்க்கம் முற்றிய நிலையில் உரிமையாளர் 119 அவசர இலக்க பொலிசாருக்கு அறிவித்தார். இதன்பிரகாரம் யாழ் பொலிசார் குறித்த இடத்துக்கு சென்றனர். நிலைமைகளை அவதானித்த பொலிசார் இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்திவிட்டுச் சென்றனர்.
காணி உரிமையாளர் பொலிஸ் நிலையம் சென்றிருந்த போதும் மாநகரசபை உறுப்பினர்கள் செல்லாதிருந்தனர். அதன் பின்னர் குறித்த தவறுக்காக யாழ். மாநகர சபை முதல்வர் உரிமையாளரிடம் மன்னிப்பும்.கோரியதாக காணி உரிமையாளர் தெரிவித்தார்.
இதேநேரம் கடந்த மாநகர அமர்விலும்.இவ்விடயம் பேசப்பட்டு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் குறித்த ஒழுங்கையில் மண் அகழ்வதற்காக வாகனங்களுடன் மூன்று மாநகர சபை உறுப்பினர்கள் சென்றனர்.
இதன்போது, மீண்டும் முரண்பாடு உருவாகியதுடன் மாநகர சபை உறுப்பினர்கள் தம்மை அச்சுறுத்தல் விடுத்து மண்ணை அள்ள முயற்சித்ததாக காணி உரிமையாளர் தெரிவித்தார்.
காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியச் சென்றபோது அதை பொலிசார் ஏற்க மறுத்ததாகவும் நேற்று மீண்டும் முறைப்பாடு பதிய சென்றுள்ளார். ஆனாலும் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்தாக அவர் தெரிவித்தார்.


















