-நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்-
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி முதல் மரணச் ஊர்வலத்தின் போது வீதிகளில் பட்டாசு கொளுத்த முற்றாக தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான இறுதி சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இவ்விடயம் குறித்து முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்த தவிசாளர் அதை சபையின் விவாதத்திற்கு விடுத்திருந்தார்.
சபையில் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நிலையில் சில உறுப்பினர்கள் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். குறிப்பாக இறந்தவர்களை எரியூட்டும் அல்லது அடக்கம் செய்யும் மயானங்கள் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் இருப்பதால் இறுதிக் கிரியைகளை செய்யும் அனுமதி வழங்கும்போது அதற்கான தடை தொடர்பில் தெரிவிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
அதையும் குறித்த தரப்பினர் மீறும் பட்சத்தில் தண்டப்பணம் அறவீடு செய்வதற்கும், அனுமதிச்சீட்டில் இது தொடர்பான தடையை மீறும் பட்சத்தில் எவ்வகையான தண்டம் அறவிடப்படும் என்ற விபரம் அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


















