சாவகச்சேரி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்!
-த.சுபேசன்-
சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு மற்றும் மறவன்புலோ மேற்கு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்த பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபை உறுப்பினர் தி.விமலதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இவ்விடயத்தை சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மறவன்புலோவில் தினமும் டிப்பர்கள் மூலம் சட்ட விரோதமாக மணல் அகழப்படுகின்றது. மணல் கொள்ளை இடம்பெறுகின்ற பகுதிகளில் இரகசியக் கமராக்களைப் பொருத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
எமது பிரதேசசபை எல்லைக்குட்பட்ட கச்சாய் பகுதியில் மணல் கொள்ளையர்களின் உழவியந்திரம் மோதி அண்மையில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
எனவே இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்க மணல் கடத்தலை முற்றாக நிறுத்த வேண்டும். மறவன்புலோ கிராமத்தில் கடற்கரையோரம் மணல் அகழப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


















