-கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்-
-த.சுபேசன்-
இலங்கையின் மலையக மக்களை யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் உரிய வசதிகளுடன் குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் என கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச காணிகள் மற்றும் புலம்பெயர் மக்களுடைய காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் சனத்தொகை அதிகமாக உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்;படுகின்றது. இருப்பினும் யாழ். மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் உரிய வசதி வாய்ப்புகள் இல்லாமை,குறிப்பாக தண்ணீர் வசதி இன்மையால் மக்கள் வேறு பிரதேசங்களுக்குக் குடிபெயர்கின்றனர்.
தீவகத்தின் நெடுந்தீவு, அனலைதீவு, புங்குடுதீவு, நாரந்தனை, காரைநகர் ஆகிய பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை காரணமாக மக்கள் வேறு இடங்களுக்குப் புலம்பெயர்கின்றனர்.
எனவே அரசாங்கமும் புலம்பெயர் உறவுகளும் தீவுப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி அங்கு மலையக மக்களை குடியமர்த்துவது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த திட்டம் வரவேற்கப்படக் கூடியதாக இருக்கும். குடியமர்த்தப்படும் மக்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















