-அழுத்தங்கள் மூலம் அடிபணிய வைக்க முடியாது-
-சுயாதீனமான செயற்பாட்டு உரிமை எனக்கு உண்டு-
-சுமந்திரன் இல்லா விசாரணை குழுவில் ஆயராவேன்-
-தெட்டத் தெளிவாக எடுத்துரைத்த சிறீதரன் எம்.பி-
-இ.கலைஅமுதன்-
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் அரசியல் குழுவின் தீர்மானம் முறையாக வழிமொழியப்பட்ட உத்தியோக பூர்வமானது இல்லை என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீரதன், அந்த தீர்மானத்மதினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெட்டத் தெளிவாக தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுகூட்டத்தில் சிறீதரனின் பாராளுமன்றத் தலைவர் பதவி நீக்கப்பட்டதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் அவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் நான் பங்குபற்றவில்லை. நான் இல்லாத இடத்தில், என்னிடம் எவ்விதமான விளக்கங்களும் கோரப்படாது, என்னை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீங்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு எழுத்து மூலமாகவும் அறிவிக்கப்பட்டது. அதுவொரு தவறான அணுகுமுறையாகும்.
இதுமட்டுமல்லாமல், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவிக்கு கட்சிக்கும் தொடர்புகள் இல்லை. ஆகவே கட்சி அவ்விதமான அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. என்னால் சுயாதீனமான தீர்மானங்களை எடுத்துச் செயற்படுவதற்கு முடியும். அதேநேரம் கட்சி ஜனநாயக பண்புகளைக் கொண்டது என்றால் இந்த விடயத்தில் நியாயமான அணுகுமுறைகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.
வவுனியா கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கட்சியின் தற்போதைய தலைவருக்கு அறிவித்திருந்தேன். அப்போது, அரசியலமைப்பு பேரவை குறித்த விடயம் பேசப்படுமா என்று வினவினேன். அதற்கு அவ்விடயம் நிகழ்ச்சி நிரலில் இல்லையென்றே பதிலளித்தார். அவ்வாறான நிலையில் எவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், திருகோணமலையில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்திலும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டபோது அவ்வாறான கோரிக்கையை கட்சி முன்வைக்க முடியாது என்றும் சுயாதீன விசாரணைக்குழுவொன்றையோ அல்லது ஒழுக்காற்று விசாரணைக்குழுவொன்றையோ அதுகுறித்து நியமித்து நடவடிக்கைகளை எடுத்தால் அதில் முன்னிலையாகுவதற்கு தயாராகவே உள்ளேன் என்றும் கூறினேன்.
குறிப்பாக சுhயதீன விசாரணைக்குழுவில் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்களின் பங்கு இருக்கக்கூடாது என்பது மட்டும் தான் எனது நிபந்தனையாகும். இவ்வாறான நிலையில் கூட்டத்தி;ன் இறுதியில் சுமந்திரன் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக தீர்மானம் எடுக்கின்றோம் என்று கூறினார். அதற்கு யாரும் வழிமொழிவைச் செய்யவில்லை. அது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவுமில்லை.
ஆகவே, அவ்விதமானதொரு தீர்மானத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது கட்சி ஜனநாயக பண்புகள் நிறைந்தது. ஆனால் அண்மையக்கால செயற்பாடுகள் ஏதேச்சதிகாரத்தினை நோக்கிச் செல்கின்றது என்றார்.


















