-அரசாங்க அதிபர் தகவல்-
-க.சபேஷன்-
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் நடக்கும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு.டி.எஸ்.ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் நேற்று தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார்.
இதன் போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 CEYPETCO) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று புதன்கிழமை பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், இதன் மூலம் வரிசையினை கட்டுப்படுத்தலாம் எனவும் அரசாங்க அதிபர் யோசனை தெரிவித்திருந்தார்.
அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய, கொலன்னாவையிலிருந்து நேரடியாக எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் இன்று மட்டும் 310,200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் வட,பிராந்திய முகாமையாளரால் விநியோகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


















