யாழ். வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாரிய ஒரு இனப்படுகொலையின் சாட்சியாக விளங்குகிறது.
இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் உண்மையை கண்டறியாமல், அவர்களுக்கு தண்டனை வழங்காமல் கடந்த அரசாங்கங்களைப் போல் செயல்பட்டு வருகின்றது எனவும், யாழ். வருகை தந்த ஜனாதிபதி அநுர செம்மணியை பார்வையிடாமல் சென்றது பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியின் வடிவமாக பார்க்கப்பட வேண்டும் எனவும், இந்தப் பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதே தீர்வுக்கு வழிவகுக்கும் என்றார்.


















