-உயிர் இழப்பு ஏற்படும் அபாயம்-
–சொ.வர்ணன்-
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபர் தலைமையில் டெங்கு கட்டுப்படுத்தல் விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சடுதியான அதிகரிப்பை காட்டுகிறது.
இந்த அதிகாரிப்பை நாம் சாதாரண அதிகரிப்பதாக எடுத்துக் கொள்ளக் முடியாது. ஏனெனில் 2023 இல் யாழ். மாவட்டத்தில் சுமார் 3986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 10 இறப்புக்கள் பதிவாகியது.
அதேபோல் 2024 ஆம் ஆண்டு சுமார் 5000 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 60 இறப்புக்கள் பதிவாகியது.
இவ் வருடம் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் 22 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாதம் முடிவுறாத நிலையில் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பிரதேச செயலக பிரிவில் 171 பேரும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 151 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 142 பேரும், சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 80 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ள நிலையில் உயிரிழப்புக்களை தவிர்க்க அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















