பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் பிரச்சார செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச தொனிப்பொருளுக்கு அமைவாக யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை பால்நிலை வன்முறைக்குக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம் ‘அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். சமூக செயற்பாட்டு மைய நிறைவேற்று அலுவலர் ந.சுகிர்தராஜ் அரசாங்க அதிபருக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கினார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், உதவி மாவட்ட செயலர் செல்வி உ.தர்சினி, பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திருமதி கி.தயாபரி மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


















