-சொ.வர்ணன்-
யாழ். மாவட்டச் செயலகத்தினால் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான கொடுப்பனவு பட்டியல் எண்ணிக்கை பல்வேறு தரப்பினர்களின் அழுத்தங்களின் காரணமாக அரைவாசியாக குறையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ். மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக 14 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவுசெய்யப்பட்டு தலா 25,000 ரூபாய் வீதம் சுமார் 36 கோடி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் வெளியாகியது.
யாழ். மாவட்டத்தில் அதிகளவிலான மழைவீழ்ச்சியோ அல்லது அல்லது உயிரிழப்புக்களோ இல்லாத நிலையில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததாகவும் கிணறுகளை சுத்தம் செய்வதற்குமாக சுமார் 14,459 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 361,475,000 ரூபாய் ஒரு குடும்பத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் தேவை என்ற மாவட்டச் செயலகத்தின் பட்டியல் வெளியானது.
இந்நிலையில் குறித்த எண்ணிக்கை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில் அது தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.
இவ் விடயம் நேற்றையதினம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இழப்பீடு பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலக ரீதியாக காட்சிப்படுத்தாமல் அவசர அவசரமாக வங்கி கணக்குகள் பெறப்பட்டமை தொடர்பில் செய்தியை வெளிக் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிராம சேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கு பற்றிய கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
குறித்த கலந்துரையாடலில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களில் வெளிவந்ததைப் போன்று பயனாளிகள் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டுமானால் அதற்கு நாம் உடன்பட மாட்டோம் எனவும் அவ்வாறு காட்சிப்படுத்த வேண்டுமானால் நாம் தரும் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என தெரிவித்த நிலையில் நேற்றைய தினம் யாழ் மாவட்டத்திலுள்ள அநேகமான பிரதேச செயலகங்களில் புதிய பட்டியல் தயாரிக்கும் பணி இடம்பெற்றது.
இந்நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தால் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான கொடுப்பனவுப் பட்டியல் எண்ணிக்கை அரைவாசியாக குறையும் சாத்தியமுள்ளதாக தெரியவருகின்றது.
















