-க.கனகராசா- , -பா.பிரதீபன்-
யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இணைந்து எஞ்சிய எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொல்பொருட் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் அப்பணி நிறுத்தப்பட்டிருந்தது.
தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இணைந்து எஞ்சிய எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகரசபையின் பொறியியலாளர், தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


















