-பா.பிரதீபன்-
யாழ். பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’, இம்முறை ஊடகக் கற்கைகள் துறை மாணவன் வோல்டர் இருதயராஜன் டிலக்ஸனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமான நிலையில் இரண்டாம் நாளான இன்று இந்த விருது வழங்கப்படவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடக மாணவனாகக் கல்வி பயின்று, ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்தவர் சகாதேவன் நிலக்சன் கடந்த 2007 ஓகஸ்ட் 1 ஆம் திகதி இராணுவ ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்துப் பெற்றோர் முன்னிலையிலேயே ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
அன்னாரின் ஞாபகார்த்தமாக, அவரது பாடசாலை நண்பர்களான யாழ். இந்துக் கல்லூரியின் 2004 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்குத் தங்கப் பதக்கம் வழங்குவதற்கான ‘நிலா நிதியம்’ உருவாக்கப்பட்டது.
இந்நிதியச் சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின்போது, யாழ். பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதியிடம் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது. இதற்கமைவாகக் கடந்த ஏழு ஆண்டுகளாக இத்தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.


















